December 25, 2013

அற்புதம்

வெஞ்சொல் 
உமிழ்ந்துரையாடி
மனம் நோகத்தரும்
தருணங்களில் கூட
கடைச்சொல்லாய்
'உம்மா'
என்றே முடித்துவைக்கும்
நீயொரு
அற்புதப்பிறவி.

December 22, 2013

மருந்து

இனிவரும்
இரவெல்லாம் 
நினைவிருந்து
மருந்தாகும் 
வரும்பிரிவிற்கு.,

மார்மீது 
தலைசாய்த்துறங்கய
இம்மதியம்.

November 30, 2013

பொழுது

பெருமழை 
பெய்ந்து 
ஒய்ந்தது போல்
நினைவுகளெங்கும்
துளித்துளியாய்  
சொட்டிக் கொண்டிருக்கிறது 
சேர்ந்து 
கதைபேசி 
ஆலிங்கனம் 
செய்திருந்த பொழுதுகள்.

 

November 28, 2013

பொழுது

அருகிருந்து
கால் விரல் சொடுக்கி
அகமகிழ்ந்திருந்திடும்
அருந்தருணமிழந்து,
முகமறியா
மொழிதெரியா
புதுநகரினில்,
விடைபெறுகையில்
விரலசைத்து
வழியனுப்பிய
கடைநிமிடங்கள்
எண்ணிக் கழியுதென்
பொழுது.

November 26, 2013

அம்மு

வாழ்வினி என்றென்றும்
உன்னோடு 
என்றாகி
ஆண்டொன்றானது 
இன்றோடு.

அள்ள அள்ளக் குறையாத
செல்வம் அன்பன்றி
வேறில்லை,
அந்த அட்சயம்
நீயன்றி யாருமில்லை.

நானற்ற நாட்களிடை
நீயுற்ற வேதனையை
அருகிருக்கும் பொழுதுகளில்
அறிந்திடத் தந்திடுமின்
காதல்
என்றென்றும் நெஞ்சோடு.

November 19, 2013

வார்த்தை

சாரமற்ற
வழமை வார்த்தைகள்
வழி
சொட்டும் சோகம்
மௌன
ரணத்திலும்
கொடிது.

November 18, 2013

பயம்

தூரப்பிரிவறுக்கும்
வழி 
துரிதம் 
அறிகிலையேல் 
நின் 
துயரம் 
தினம் வளர்ந்தே 
நம் 
நேசம் தின்றிடுமோவென 
அஞ்சி 
நாள் இழந்தேன்.
 

October 19, 2013

பாசக்கள்

எத்தனை மடக்கு
பருகினும்
போதையாகுதில்லை,
புத்தி தெளிவாக்கி
நின் பால்
பித்தம் 
பெரிதாக்கும்
நீ
நாளும் தரும்
பாசக்கள்.

October 03, 2013

நீயிருக்க

நோயிருக்க...
அருகே
நீயிருக்க...
உடலில்
நோவிருப்பதில்லை.

September 22, 2013

அம்முவாகிய நீ


விடுபட்டுப் போனதொரு 
வழக்கம்!

அன்பின் பரிமானமாய்,
காதலின் பரிசாய்,
புரிதலின் சொற்களாய்,
புலம்பலின் வடிகாலாய்,
தனிமையின் துணையாய்,
தொலைவின் தொடர்பாய்
என
நாளும்
உனக்கென
நானெழுதிய கவிதைகளெனும்
வார்த்தை கோர்வைகள்.

தொடரும்...



August 18, 2013

கவி


வார்த்தைகள் கோர்த்தெடுத்தொரு 
கவி புனைந்திருந்தேன்
நெஞ்சில்...
*
மை சிந்த
மறுத்து
மௌனமெழுதி
சதி செய்ததென்
எழுதுகோல்...
*
புரிந்ததாய்
புருவ நெரிப்பில் 
புன்னகைத்தாய் நீ

July 03, 2013

கலவை


கூழாங்கல்லோடிய  
நீரென 
இனிக்கிதென் வாழ்வு, 
சுவையேற்றியவள் நீ.

June 21, 2013

மொழி

சொல்லால் 
சொல்லாமல் 
மறைப்பதெல்லாம் 
சொல்லாததாகிவிடாது.

வார்த்தைகளை நம்பி மட்டுமல்ல மொழி!

June 13, 2013

உலகம்


என்னைத்தவிர 
யாருமேயற்ற 
உன் பொன்னுலகம் 
தானே சொர்க்கம்.


June 03, 2013

உயிரே

இயல்பாய்இத்தனை 
நின்போலன்பு 
செய்வதொரு நாளும் 
வாய்க்காதெனக்கு 

நம்மில் 
அன்பிற்ச் சிறந்தவள்  நீ.
அதிர்ஷ்டக்காரன் நான்.

May 23, 2013

யாக்கை

தனித்துறங்கி 
கழிந்தன 
சில இரவுகள்.

இறுக்கி அனைத்த 
கைகளிடையே 
காற்று மட்டுமே 
மிச்சமிருந்தது.

May 21, 2013

தனிமை


இனியொரு
பொழுதேனும்
தனித்திருப்பதெங்கனம்,
காற்றிடை
கதை பேசும் 
மரமென்றானது
மனம்.

May 19, 2013

கரம்


பாதம்
பட்டுடையும்
நுரையுடை அலைகடல்
கரை மணலழுத்தி
கரம் பற்றி நடந்திட
ஓடி ஒளியிதிந்த
அலையாடும் நண்டுகள்,
பாதம் பதிந்த பள்ளங்களில்....


May 08, 2013

மௌனமே!

நீள யோசித்து 
நெற்றி முத்தமொன்றிட்டு 
ஆழ்மௌனம் 
சூடிக்கொண்டாய்.

என்னென்று கேட்கமாட்டேன்,
ஏதாய் 
இருந்தால்தானென்ன?

May 05, 2013

அணை

எலும்புகள்  
எல்லாம் உடைபடாது 
எப்போதும் போலில்லாமல் 
இப்போதேனும் 
இறுக்கி அணை.


May 03, 2013

ஒரு சொல்

தாளமுடியாத சோகத்துடன் 
நீளுமிந்த இரவின் 
சோகம் 
முடித்துவைக்க 
ஒற்றைச்சொல் போதும்.

யார் 
உச்சரிப்பது 
என்பதன் சூன்யத்தில் 
வெறுமை நிறைந்திருக்கிறது.

April 30, 2013

மையம்

சண்டைகளின் 
தொடக்கப்புள்ளி 
ஏதாயிருந்தால் என்ன,
சமாதானத்தின் 
கடைசிப்புள்ளி 
கலவிதானே !

April 28, 2013

உயிரே


ஆயிரம் வன்சொல் மொழியாடு
குறையொண்றுமில்லை,
ஒரு
நொடி கூட
தாளவில்லை
நின் 
மௌனமொழி
வெம்மை.



--
Sent from Gmail Mobile

April 27, 2013

சாதனை


"என்ன தவம் செய்தேனே"
என
என்னை 
எண்ணவைத்ததே 
நீ செய்த
சாதனை. 

சோம்பல்

கவி எழுத மறந்த நாட்கள் 
எல்லாம் 
காதல் தின்று வளருது சோம்பல்.


April 08, 2013

முத்தம்



இடைவிடாது கரம்.
இடைவிடாது முத்தம்.

முன்னது என்னது.
பின்னது நம்மது.

தேநீர்


பழுப்பேறிய 
பின்மாலை பொழுதில், 
அருகிருந்து 
முன்வாசலமர்ந்து  
தேநீர் பருகுவதே 
சொர்க்கமெனப்படுவது.

முத்தம்

முத்தங்கள் 
முத்தங்கள் தான் 
காமம், 
காதலென்ற 
கருப்பொருள்கள் அதற்கேது.

February 17, 2013

மௌனமொழி

சொல்லாத சோகம்,
விழாத கண்ணீர்,
எழாத குறைமொழி.

மௌனங்கள் எப்போதும் சரியுமல்ல,
வார்த்தைகள் எப்போதுமே தவறுமல்ல.

February 16, 2013

காதல்

உடல் மீதினில் 
நகக் கீறல்கள் 
மிகக்குறைவு.

அப்பாடா,
காமம் மிகா உறவு.

February 15, 2013

எழுதிடா கவி

பேர் சொல்லி அழைக்குமுறவு,
நோய் கொள்ள அணைக்கும் கரங்கள்,
நான் வெல்ல சிரிக்கும் இதழ்கள்,
மென் கிள்ளலில் சிவக்கும் சதைகள்,
இடை தொட சொருகும் விழிகள்,

அத்தனையும் 
எனக்கான உன் கவிகளன்றி, வேறென்ன? 

February 14, 2013

இல்லாமை

இத்தனை காத்திருப்புகளுக்கு 
பின் கிட்டிய 
உறவை 
எத்தனை காத்திரமாய் காத்திடல் வேண்டும்?

இருப்பின் அருமை இருப்பிலேயே 
புலப்பட்டுவிட்டால் 
இல்லாமையின் அருமை 
இல்லாமலே போய்விடும் தானே? 

நீயில்லாமை 
என்பது 
இல்லாமலே போகட்டும்.

February 13, 2013

தருணங்கள்

எண்ணி மகிழும் தருணங்கள் 
எத்தனை தந்தேனுனக்கு? 
என்றெண்ணிட,

கால் நனைத்து, 
கைவிரல் தழுவி, 
தலை கழுவி, 
மேலேறி
மூச்சடைக்கிறது.

நீ 
நாளும் சிந்திய 
கண்ணீர்த்துளி.


வார்த்தை அமிலங்கள் 
வீசி உன்னை 
வதைத்த 
நொடிகள் நினைவெழ மூச்சடைக்கிறது.





February 12, 2013

தேடல்

பெண் தேடி விழியலையும்,
மனம் கடிந்து சிரம் திருப்பும்,
மறுபடியும் விழிநகரும்...

அத்தனை பெண்களிலும் உன்னை தேடுது விழி.

எத்தனை தேடினும் எவளிலும் இல்லை "நீ".


February 11, 2013

வசமாகாதிரு

எத்தனை கவிதைகள் 
எழுதியென்ன ?

எழுத்துக்கு புலப்படாமலிருக்குதொரு 
அற்புத கவி.

எத்தனை நாள் வசமாகாதிருக்கும்...

பார்க்கலாம்...

நெஞ்சாழத்திலொரு மென் குரல் வேண்டிக்கிடக்கிறது.
"வசமாகாதிரு"


February 10, 2013

பிரியம்

யார் சொல்லி விடிந்ததிந்த இரவு...
கூடிக்கிடக்கும் உடலங்கள் 
வெயில் பட பிரியுமென்பது சாத்தியமில்லை...
பிரயம்கூடிகிடப்பதினால்...

February 09, 2013

௨௱௬

பகை நிற்கும் விழிகளுனது,
அனல் கக்கும் மொழிகளெனது,
கடந்திடக்கூடுமோ 
இந்த 
கொடுங்கனல் நொடிகளை.
மறுமுறை சிரித்திடல் ஆகுமா 
என 
தவிக்குது உதடுகள்.



February 08, 2013

௨௱௫


இரவுகளின் அடர்த்தி கடத்தி 
இமையெங்கும் வியாபித்திருக்கிறது 
நின் கொடியிடை இடையே 
பின்னிக்கிடந்திருந்த பொழுதின் 
பிம்பம்.

சிரம் சாய்த்து நோக்கிட 
சிகை களைந்து 
நீளும் பெருமூச்சோடு 
அருகே அயர்ச்சியில் உறங்கிகிடக்கிறாய்.

எடுத்து மடிவைத்து 
இரவுமுழுக்க ரசிக்கவேண்டும் போலிருந்தது.

பைத்தியக்கார இரவு 
அதற்குள் விடிந்திருந்தது.


February 07, 2013

௨௱௪


மழலைகள் தோற்றிடும் 
கேலிகளோடு 
மகிழ்ந்தாடி விளையாடுகிறாய்.

பெண் மகவுயினியெதர்க்கு ? 

February 06, 2013

௨௱௩


யாதொரு தவறுமின்றி 
வசைமொழி வாங்கிடும் 
பொழுதினில் 
மெல்லத்தலை 
கவிழ்ந்து 
உள்ளழுது 
வெளியுதிர்ப்பாயொரு 
மென்புன்னகை.

அக்கணமே முடிந்திட வேண்டும் பிணக்கு,
முத்தம் தந்து 
முகிழ்த்திட வேண்டும் நின்னை.

February 05, 2013

௨௱௨


எல்லா நதிகளும் 
கடலை நோக்கி பாய்வதுபோல் 
நம்மிடையேயான 
எல்லா பிணக்குகளும் கலவி நோக்கி நகர்கிறது. 

February 04, 2013

௨௱க


சட்டென மின்னொளியருந்த 
இரவொன்றில் 
நின்னொடு 
சின்ன ஒளிவெளிச்சத்தில் 
தின்னத்தானே 
இந்த பகலென்று 
நகர்த்திடும் 
நாட்களிடை 
எப்போது வாய்க்குமந்த 
பொன்னாள்.

February 03, 2013

௨௱


ஏதாவது 
மொழிந்து கொண்டயேயிருக்கும் 
இந்தக்கடல் 
தனிமைசூழ வந்தமர்ந்திருந்த  
அத்தனை 
பின்மாலை பொழுதிலும்.
ஏதும் புரியாமல் 
எண்ணிக்கொண்டிருப்பேன் 
நுரையென உடையும் 
கரைதொடுமலைகளை.

உன்னோடு வந்தமரும் 
முன்மாலைகளில் 
என்னிடம் மொழியாடுவதேயில்லை 
இந்தக்கடல்.
நம்தனிமைகளை 
நமதாக்கிவிட்டு கரையோடு கதைபேசியழிகிறது.


February 02, 2013

௱௯௯


பூ சூடி 
மணம்பரப்பி 
மனம் நிரப்பும் 
மாலைகளின் 
இரவுகள் முடிவதாயில்லை,
தாளலயத்தோடு.

February 01, 2013

௱௯௮


பேரங்காடி தெருக்களில் 
நின் கரம் பிடித்து 
நடைபழகும் 
"அற்புதம்"
தப்பென எண்ணி
தவறிழைத்தேன்.

மன்னித்து கரம்பிடிடி.

January 31, 2013

௱௯௭


வீதியெதிர்  நோக்கி 
நின் விழி,
வாசலெதிர் நோக்கி 
யென் வழி,
இந்நாட்களின் மாலைகள் 
நிகழ்த்திக்காட்டும் மொழி!

January 30, 2013

௱௯௬

தத்தித் தடுமாறி 

செய்திடும் 
புத்தம் புது சமையல் உனது.

தினமொரு ருசியென 
என் அனுபவங்கள் புதிது.

January 29, 2013

௱௯௫


புருவநெரிப்புடன் 
தெறித்து விழுந்த 
ஒற்றை 
கடுஞ்சொல் 
வெம்மை தாழாது 
விழிநழுவி 
புவிபாயும் 
துளிமறைத்து 
புறமேகுவாய்.

உடற்கூசி 
உயிர்மருகி 
தவறுணர்ந்திட்டேன்.
பயனென்னடி?

சொல்கீறிய ரணமாருமோ ?

January 28, 2013

௱௯௪


அடுக்களை இடுக்கிடை 
திடுக்கிடப்பற்றி - நின் 
அக்குள் வெளியிடை 
மென் முத்தம் பதித்திடுமிந்த 
அற்புதக்காலைகள் 
எத்தினம் வருமென 
காத்து விழித்திருந்த 
அத்தனை இரவும் 
மொத்தமாய் 
விடிந்தது காண் !