February 17, 2013

மௌனமொழி

சொல்லாத சோகம்,
விழாத கண்ணீர்,
எழாத குறைமொழி.

மௌனங்கள் எப்போதும் சரியுமல்ல,
வார்த்தைகள் எப்போதுமே தவறுமல்ல.

February 16, 2013

காதல்

உடல் மீதினில் 
நகக் கீறல்கள் 
மிகக்குறைவு.

அப்பாடா,
காமம் மிகா உறவு.

February 15, 2013

எழுதிடா கவி

பேர் சொல்லி அழைக்குமுறவு,
நோய் கொள்ள அணைக்கும் கரங்கள்,
நான் வெல்ல சிரிக்கும் இதழ்கள்,
மென் கிள்ளலில் சிவக்கும் சதைகள்,
இடை தொட சொருகும் விழிகள்,

அத்தனையும் 
எனக்கான உன் கவிகளன்றி, வேறென்ன? 

February 14, 2013

இல்லாமை

இத்தனை காத்திருப்புகளுக்கு 
பின் கிட்டிய 
உறவை 
எத்தனை காத்திரமாய் காத்திடல் வேண்டும்?

இருப்பின் அருமை இருப்பிலேயே 
புலப்பட்டுவிட்டால் 
இல்லாமையின் அருமை 
இல்லாமலே போய்விடும் தானே? 

நீயில்லாமை 
என்பது 
இல்லாமலே போகட்டும்.

February 13, 2013

தருணங்கள்

எண்ணி மகிழும் தருணங்கள் 
எத்தனை தந்தேனுனக்கு? 
என்றெண்ணிட,

கால் நனைத்து, 
கைவிரல் தழுவி, 
தலை கழுவி, 
மேலேறி
மூச்சடைக்கிறது.

நீ 
நாளும் சிந்திய 
கண்ணீர்த்துளி.


வார்த்தை அமிலங்கள் 
வீசி உன்னை 
வதைத்த 
நொடிகள் நினைவெழ மூச்சடைக்கிறது.





February 12, 2013

தேடல்

பெண் தேடி விழியலையும்,
மனம் கடிந்து சிரம் திருப்பும்,
மறுபடியும் விழிநகரும்...

அத்தனை பெண்களிலும் உன்னை தேடுது விழி.

எத்தனை தேடினும் எவளிலும் இல்லை "நீ".


February 11, 2013

வசமாகாதிரு

எத்தனை கவிதைகள் 
எழுதியென்ன ?

எழுத்துக்கு புலப்படாமலிருக்குதொரு 
அற்புத கவி.

எத்தனை நாள் வசமாகாதிருக்கும்...

பார்க்கலாம்...

நெஞ்சாழத்திலொரு மென் குரல் வேண்டிக்கிடக்கிறது.
"வசமாகாதிரு"


February 10, 2013

பிரியம்

யார் சொல்லி விடிந்ததிந்த இரவு...
கூடிக்கிடக்கும் உடலங்கள் 
வெயில் பட பிரியுமென்பது சாத்தியமில்லை...
பிரயம்கூடிகிடப்பதினால்...

February 09, 2013

௨௱௬

பகை நிற்கும் விழிகளுனது,
அனல் கக்கும் மொழிகளெனது,
கடந்திடக்கூடுமோ 
இந்த 
கொடுங்கனல் நொடிகளை.
மறுமுறை சிரித்திடல் ஆகுமா 
என 
தவிக்குது உதடுகள்.



February 08, 2013

௨௱௫


இரவுகளின் அடர்த்தி கடத்தி 
இமையெங்கும் வியாபித்திருக்கிறது 
நின் கொடியிடை இடையே 
பின்னிக்கிடந்திருந்த பொழுதின் 
பிம்பம்.

சிரம் சாய்த்து நோக்கிட 
சிகை களைந்து 
நீளும் பெருமூச்சோடு 
அருகே அயர்ச்சியில் உறங்கிகிடக்கிறாய்.

எடுத்து மடிவைத்து 
இரவுமுழுக்க ரசிக்கவேண்டும் போலிருந்தது.

பைத்தியக்கார இரவு 
அதற்குள் விடிந்திருந்தது.


February 07, 2013

௨௱௪


மழலைகள் தோற்றிடும் 
கேலிகளோடு 
மகிழ்ந்தாடி விளையாடுகிறாய்.

பெண் மகவுயினியெதர்க்கு ? 

February 06, 2013

௨௱௩


யாதொரு தவறுமின்றி 
வசைமொழி வாங்கிடும் 
பொழுதினில் 
மெல்லத்தலை 
கவிழ்ந்து 
உள்ளழுது 
வெளியுதிர்ப்பாயொரு 
மென்புன்னகை.

அக்கணமே முடிந்திட வேண்டும் பிணக்கு,
முத்தம் தந்து 
முகிழ்த்திட வேண்டும் நின்னை.

February 05, 2013

௨௱௨


எல்லா நதிகளும் 
கடலை நோக்கி பாய்வதுபோல் 
நம்மிடையேயான 
எல்லா பிணக்குகளும் கலவி நோக்கி நகர்கிறது. 

February 04, 2013

௨௱க


சட்டென மின்னொளியருந்த 
இரவொன்றில் 
நின்னொடு 
சின்ன ஒளிவெளிச்சத்தில் 
தின்னத்தானே 
இந்த பகலென்று 
நகர்த்திடும் 
நாட்களிடை 
எப்போது வாய்க்குமந்த 
பொன்னாள்.

February 03, 2013

௨௱


ஏதாவது 
மொழிந்து கொண்டயேயிருக்கும் 
இந்தக்கடல் 
தனிமைசூழ வந்தமர்ந்திருந்த  
அத்தனை 
பின்மாலை பொழுதிலும்.
ஏதும் புரியாமல் 
எண்ணிக்கொண்டிருப்பேன் 
நுரையென உடையும் 
கரைதொடுமலைகளை.

உன்னோடு வந்தமரும் 
முன்மாலைகளில் 
என்னிடம் மொழியாடுவதேயில்லை 
இந்தக்கடல்.
நம்தனிமைகளை 
நமதாக்கிவிட்டு கரையோடு கதைபேசியழிகிறது.


February 02, 2013

௱௯௯


பூ சூடி 
மணம்பரப்பி 
மனம் நிரப்பும் 
மாலைகளின் 
இரவுகள் முடிவதாயில்லை,
தாளலயத்தோடு.

February 01, 2013

௱௯௮


பேரங்காடி தெருக்களில் 
நின் கரம் பிடித்து 
நடைபழகும் 
"அற்புதம்"
தப்பென எண்ணி
தவறிழைத்தேன்.

மன்னித்து கரம்பிடிடி.