October 31, 2012

௱௫

புயலடிக்கிறது.
நானிருக்கும் இடத்தில் ...

என் புலத்திலும்...
நின் அகத்திலும்...

October 30, 2012

௱௪

நேற்றை நாள்முழுக்க 
கண்ணடித்து 
தூரமுத்தமிட்ட
பின்வாசல் 
இன்று 
பிடிக்கவில்லையென்கிறாய்.

அந்த 
பின்வாசல் 
நினைவோ,
அடுத்த
சந்திப்பு வரை 
பொக்கிஷமாயிருக்கும் 
எனக்கு.

October 29, 2012

௱௩

பிரிவு சுமந்து 
பயணப்படும் 
பயணங்களின் 
தூரத்திற்கு 
நேர்விகிதமதிகரிக்கும் 
துயரம்.

பசும் நிகழ்வுகளின் 
நினைவுகளை 
களிம்பாக்கி 
மருந்திட 
துயர்காய 
வலி மிகும்.

October 28, 2012

௱௨

எத்தனை
தூரமுத்தங்கள்...
எத்தனை எத்தனை 
விழிமொழிகள்...
என்னவியாலா 
குறுநகைகள்...
எவ்வளவு 
பூரிப்பு...

இந்நாள் 
போலொரு 
நன்னாள் 
இனி சாத்தியமே...
என்றாலும் 
இந்நாள் 
எந்நாளும்
நினைவுநிறை 
பொக்கிஷமே 

October 27, 2012

௱௧

நொடிகளை 
எண்ணியபடியே 
கழியுதிந்த 
நாளின்
நொடிகள்.

முகம் காணும் 
முதல் நொடி எதிர்நோக்கியொரு 
நீள் பயணம்.

October 26, 2012

முகம்காணா 
நாட்களிடை 
நெஞ்சு கிழித்தெழும்
தனிமையையும் 
விரகத்தையும் 
ஆற்றிட 
வடிகாலானதிந்த
"அம்மு கவிதைகள்" 

நன்றிகள் அம்மு.

October 25, 2012

௯௯

சோகம்
கிளரும் செய்கை
தவிரடி.
சொர்க்கம் திறக்கட்டும். 

October 24, 2012

௯௮

இறுக்கியணைத்த 
நெருக்கம் தளரும் 
பொழுதினில்,
வலுவிழந்த காற்றைப்போல் 
தேகமெங்கும் 
படரும் 
உன்
விரல்கள் சுகித்திடத்தானே 
பிரிவறுக்கும் 
மூன்றாம் நொடி.

October 23, 2012

௯௭

உன்னிடமுரைக்கும் 
பொய்கள் 
கேட்கும்
சாட்சிகளிடை 
மௌனித்துக் கிடக்கிறதென்
நேர்மை.

October 22, 2012

௯௬

கண்டிப்புச்சொற்களில் 
ஒளிந்திருக்கும் 
அக்கறை 
காட்டிகுடுத்துவிடுகிறது 
பொய் கோபத்தை.

October 21, 2012

௯௫

நித்தம் சண்டையிடு,
ஜீவித்திருக்கட்டும் காதல்.

October 20, 2012

௯௪

மௌனம் பேசிக்கொண்டிருந்தோம் 
மொழி பிரம்மித்து பார்த்திருந்தது.

October 19, 2012

௯௩

நெடும்பயணக் 
பெருங்களைப்பில் 
உறங்கிப்போன 
நொடிமுதலாய் 
கனவெல்லாம் நடமாடி 
களைப்பறுக்க
நின் முகமே 
போதுமடி! 
முத்தங்கள் போதையடி! 

October 18, 2012

௯௨

மழை பிடிக்கும்,
மழை நனைதல் பிடிக்கும்,
மழை நனைந்து வாகனமோட்ட பிடிக்கும்,
மழை நனைந்து வாகனமோட்டுகையில் -
சீறிப்பாயும் வாகனங்கள் முகத்தில் சேறிறைத்தால் பிடிக்கும்,
சேறிறைத்து சீறிப்பாயும் வாகனங்கள் பார்த்து சிரிக்கப்பிடிக்கும்.

-இவனின் பைத்தியக்காரத்தனங்களை இப்படியே ரசிக்கும் இவளை மிகப்பிடிக்கும்.

October 17, 2012

௯௧


நின் 
நினைவே 
நிரம்பியிருக்கும்
தனிமை பயனங்களிடை 
காலநேரமற்று 
கவனஞ் சிதறடிக்கும்
குறுஞ்செய்திகள் 
உன்னிடமிருந்தே வந்தாலும் கூட 
வசைபாடியே வரவேற்கிறேன். 

October 16, 2012

௯௦

(நின்)குரலுணர்த்தும்
(நின்)பிணியறிந்து
(என்)நெஞ்சழுதிடும்
(என்)நிலையறிந்து 
(நின்)பிணிமறைத்திட 
(நின்)குரல் சீரிடும்
(நின்)பெருமுயற்சியை
(என்) மதி மிக புரிபடும்.

October 15, 2012

௮௯

தூரத்திற்கு 
நேர்விகதமதிகரிக்கும்
நேசம்.
#
எட்டயிருந்து 
உயிர்முட்ட முட்ட
நேசித்திருக்கும் உனக்கு 
நேர்மையையும் 
நேசத்தையும் நான் தருகிறேன்,
நினைவுகளால் 
நேரத்தை நீயே களவாடிக் கொள்கிறாய்.

October 14, 2012

௮௮

விழிகளில் தேக்கி 
விடைபெறும் கடைசி நொடிவரை
விழுந்துவிடாமல் 
பாதுகாத்த
ஒற்றைக் கண்ணீர்த்துளி 
போட்டுடைக்கும்
பொங்கிவரும் அழுகையையும் 
பொய்சிரிப்பு தாங்கிய இதழ் நடிப்பையும்.

சொல்லித்தெரிவதில்லை - பிரிவுணர்ச்சி

October 13, 2012

௮௭

பிரிவிலும் கொடுமை 
பிரிவெதிர்நோக்கும் நிலைமை.
#
ஒருவொருக்கொருவர் 
உடைமையாகும் 
உரிமைநாளுக்காகவென
வலிந்தேர்க்கும் 
இந்தச்
சின்னஞ்ச்சிறு 
பெரும்பிரிவு
இத்தனை
ரணந்தருமென அறிந்திலேன் !

October 12, 2012

௮௬

'நாளுக்கு ஆயிரமென"
முத்தம் பரிமாறி 
நேர்செய்திடலாம் என்ற 
எண்ணம் மேலிட
காணவழியின்றி
கழியுமிந்த 
'நாட்கள்'
எண்ணி வைத்துக்கொள்கிறேன் 

October 11, 2012

௮௫

உயிர்தொடுமுன் 
தீண்டலுக்காக 
விரகிமருகுமென்
வாலிபம் தீசுடுகிறது.

நீரூற்றி எரியவிடு,
அல்லால் 
நெருப்பூற்றி அணைத்துவிடு.

October 10, 2012

௮௪

நீ 
தொலைவிருக்கும்
உறக்கமிழந்த 
தனிமை சொட்டும் 
மழையிரவில் 
உன் சுகந்தம் 
நினைவெழ
அழுக்கு புடவைதேடி 
போர்த்தி உறங்கவேண்டும்.

October 09, 2012

௮௩

நேசங்காட்டுவதில்
நாம் 
நேர்படப்போவதேயில்லை,
உனதன்பின் 
ஆழ நீளங்களின்
எல்லைகளை அறியக்காணோம்.
அவையளந்து
நிகர் நேசங்காட்ட 
நேரம்போதாதிந்த வாழ்நாளில்.

October 08, 2012

௮௨

சின்னச்சின்னதாய் 
ஆயிரம் பூக்கள் வேண்டுமுனக்கு...

நான் கொணர்வதோ 
ஒற்றை 
பெருந்தாமரை - எப்போதும்...
#
எதிர்பார்ப்புகள் நேர்படுவதில்லை,
உண்மைதான்.
எதிர்பார்ப்புகள் பொய்யாவதுமில்லை.

October 07, 2012

௮௧

அகம் புக
அறிந்தவுனக்கு
புத்தி புக 
அறியக் காணோம்.
#
நின்னை மறந்திலேன்...
நின் 
பொருட்டு 
மற்றொன்றில் நிறைந்துள்ளேன்.
#
ஆதாரம் நீ.
அரிதாரம் பணி.

October 06, 2012

௮௦

புரிதலற்று
தொடர் விவாதமென 
நீண்டு 
பெருஞ்சண்டையென
உருவெடுக்கும் 
அலைபேசி
உரையாடல்களை 
"உம்ம்ம்மா" 
சொல்லி 
முடித்துவைக்குமுன் 
நேசத்திற்காகவே 
வேண்டும் 
நூறு நூறு சண்டை.

October 05, 2012

௭௯

தள்ளியிருந்து 
எண்ணியிருக்கும் 
தூரப் பொழுதுகளில் 
உள்ளிலிருந்து 
உணர்விலெழுந்து
உயிருள் நிறைந்து 
காணுமத்தனை
உருவிலும் 
காட்சிப்பிழை காட்டி 
எங்கும் வியாபித்திருக்கிறாய்.

எப்படி சாத்தியமாகிறது உனக்கு? 

October 04, 2012

௭௮

என் குறைகளிடை 
கோபித்து 
சண்டையிட்டு 
இட்டுநிரப்பி 
நிறைகளாக்கத்தானே நீ?

கோபித்து 
சண்டையிட்டு 
அத்தோடு நின்றுவிட்டால் 
எப்படி? 

October 03, 2012

௭௭

அன்பின் நீட்சியை 
அடிமைத்தன விலங்கென
அர்த்தமிடும்
அறியாமை விலங்கொடி
எலும்புகள் உடைபட 
இறுக அணைத்திடும் நொடிதனில். 

October 02, 2012

௭௬


@ செல்லப்பெயர்கள்

#
எண்ணிக்கையின் வளர்ச்சி 
கூறுதுன்
அன்பின் பரிணாமம்

#
வார்த்தையின் வறட்சி 
கூறுதென்
ப்ரியத்தின் மாறாத்தனம்

October 01, 2012

௭௫

பால்யம் தொட்டு
தொடரும் 
இரவெல்லாம் 
நினைவெழும்
நீள்கலவியின்பம்
தேடும் 
நெடும்பயணம் 
முடிவுறும் 
அந்நாளில் 
அடர் மௌனங்கள் 
அர்த்தப்படும் 
தருணங்களில் 
பெருமூச்சுகள் 
சம்சாரித்துக்கொள்ளும் 
தேக்கிவைத்த 
விரகங்களை.