November 30, 2012

௱௩௫

சேலை மடிப்புகளுக்கு 
ஊக்கிட 
நின் முன் 
மண்டியிடும் 
தருணங்களில் 
முழுமையடைகிறேன் .

November 29, 2012

௱௩௪

நின் வேர்கள் விடுத்தென் மண்புதைகிறாய்.

பிரளய கண்ணீர் சூடி நீ விடைபெறும் தருணம் 
வார்த்தைகளற்று 
விம்மி அழுத கண்ணீரில் நின் அன்னை எனக்கு மட்டும் உரைத்தது.

"இனி இவள் அம்மை நானல்ல, நீயென்று"

November 28, 2012

௱௩௩

நேற்றிறவு குறையற தொட்டதில் 
விட்டகுறை தேடி 
விரல் பயணித்து 
தொட்டயிடம் யாவும் 
வண்ணம் மாறிக்கிடக்கும் தேகம்,
வெட்கம் கூடிக்கிடக்கும் விழிகள்,
என 
மொழியின்றி  
மொழிகிறாய் ஆயிரம் கவிகள்!

November 27, 2012

௱௩௨

தொட்டு முகர்ந்து 
விரல்கள் பிணைத்து 
நகங்கள் கிழித்து 
கண்ணீர் உகுத்து
தோல்வித் தழுவி 
மேவித் தடவி 
மேனி சலித்து  
மெய்யுயிர் ஒன்றாகி 
சாயம் வெளுத்தத்திந்த இரவு!

November 26, 2012

௱௩க
மாங்கல்யம் தந்து உனை நானே 
மனையாள் ஆக்கிநேனே! 

November 25, 2012

௱௩௦

வாழை கட்டி சிரிக்கிறது வாசற்பந்தல்!
நாம் 
நாளை கட்டிக்கொள்ளும் நாளைச்சொல்லி !

November 24, 2012

௱௨௯

முகம் பார்த்த
முதல்நொடி 
பறந்தோடும் 
ராவெல்லாம் நினைவேந்தி 
பயணித்த நெடும்பயணக் களைப்பு.


November 23, 2012

௱௨௮

வாழ்வின் மறக்கமுடியாத 
வெள்ளியிது.
என்னை உனதாக்கித் 
திரும்பும் 
பயணந்தனில் 
என்னைத் தள்ளிவிட்டு 
நீங்கா நினைவாகிப் போகிறது.

November 22, 2012

௱௨௭

கடிகார முட்கள் 
முடமாகி போனாதாக பிரமை.
முட்டி மோதி 
கடத்திக்கொண்டிருக்கிறேன் நாட்களை

மாலை சூடும் வேளை வரும் காலை எதிர்பார்த்து.

November 21, 2012

௱௨௬

காத்திருப்புகளின் 
தூரம் குறைத்தெழும் 
வைகறைகளின் 
கணக்குப்பார்த்து  
விரல் மடக்கி சிரித்துக்கொள்கிறேன்.


November 20, 2012

௱௨௫

நினைவு தப்பி 
விழித்தெழும் வைகறைகளில் 
நீயற்ற தனிமையை 
நிரப்பிக்கொள்கிறேன் 
நினைவில் மிச்சமிருக்கும் 
கனவுத்தீண்டல் கொண்டு.

November 19, 2012

௱௨௪

கட்டிலின் 
க்ரீச் சத்தங்கள் 
யாருக்கும் கேட்கவில்லை.

நல்லவேளை கனவுகள் ஊளையிடுவதில்லை.

November 18, 2012

௱௨௩

இடை வளைத்து 
இறுகப்பற்றிய கரம் 
இன்னும் சுகந்தத்திருக்கிறது.
இது வரமா?
இல்லை சாபமா?
இன்னும் புரிந்தபாடில்லை. 

November 17, 2012

௱௨௨

கலவி 
குழவும் 
இரவெதிர் நோக்கி 
நகரும்
நாட்களுக்கு மட்டுமே  தெரியும் 
நாம் 
குழவி 
கலவிய 
பகலை.


November 16, 2012

௱௨௧

அட!
விரல்களுக்குள் அடங்கிவிட்டது  நாட்கள்.

November 15, 2012

௱௨௦

விழியுரச 
எதிர்-எதிர் நின்று
எப்போது பார்ப்போம் 
என
எதிர்-பார்த்து  
கழிகிறது 
நாள் நகர்த்தும் நொடிகள்.


November 14, 2012

௱௧௯

என் கரமெடுத்து 
உன் சிரம்பிடித்து 
விழி நீர் துடைத்து 
காதோர கேசம் விலக்கி 
கன்னஞ்சிவக்கும் 
ஆறுதல் முத்தந்தரும் 
தருணம் கொணர்ந்தரும் 
சின்னச்சண்டைகள் 
வேண்டாமென்கிறாய்.

சரி போ.
முத்தத்தை மறுதலிக்காதே.

November 13, 2012

௱௧௮

தனியே காணக்கிடைத்த 
காலரை நொடியிடை 
கட்டியணைத்து 
கன்னம் உதடென 
சடுதியில் 
முத்தமிட்டு  
எச்சிலீரம் 
காயும்வரை 
எட்டியிருந்து 
விழிமுட்டி முட்டி 
மொழிபகிரும் 
மென்விழியால் 
நின் 
மொழிபருகிய 
இளமஞ்சள் மாலை 
இனி 
வாய்ப்பதென்நாளோ ?

November 12, 2012

௱௧௭

நீளுமுன் 
நேசம் ருசித்தே 
தித்தித்து 
தீப்பிடிக்கும் 
உதடுகளுக்கு 
தீஞ்சுவை 
அருமருந்தென 
திகட்ட திகட்ட 
திகட்டாத 
முத்தமிடு.

November 11, 2012

௱௧௬

மெல்ல இதழ் விரித்தென் 
முத்தங்கள் 
உள்வாங்குமுனக்கு 
முத்தமே 
பரிசு.

November 10, 2012

௱௧௫

குறிப்பறிந்து 
செயலாற்றுமுன்
குணம் வியக்கிறேன்.
குறு நகைக்கிறாய்.

புரியாததுபோல் "விழிக்கிறேன்"
புரியாமல் சிரிக்கிறாய்.

November 09, 2012

௱௧௪

நினைவெல்லாம் 
நீயாகி 
அனலாகிடும் தேகம்
நின் அணைப்பால் 
குளிர் மேவும்
எழில் தருணம் 
என்று மலரும் 
என ஏங்கிட
நகரும் 
என் காலம். 

November 08, 2012

௱௧௩

ஊர் சேரும் 
நேரம்,
முகம் காணும் 
நொடி,
விரல் இணைக்கும் 
தருணம்,

என 
யோசனை 
தின்றிட 
கழிகிறது 
பயண ஆயத்த நாட்கள்.

November 07, 2012

௱௧௨

உன்னடன் 
நானிடும் 
சண்டைகளில் 
சரி பாதி 
என்னுடல் நலன்
குறித்த 
நின்னதீத அக்கறை 
குறைக்க சொல்லி,
உள்ளூர பெருமிதத்தோடு!

November 06, 2012

௱௧௧

அலைபேசி 
நகரும் 
பயண தூரங்கள் 
அத்தனை 
இனிமையாய் இருப்பதில்லை.

கனவுபேசி நகரும் 
தொலைவைப்போல்.

November 05, 2012

௱௰

கண்ணிமைக்கும் 
நேரத்தில் 
கலங்கடித்து விடுகிறாய்
மனதையும் விழியையும்.
பின்னர்
நாளெல்லாம் வருந்தி
நலமுரைக்கிறாய்.

பைத்தியக்காரி.

November 04, 2012

௱௯

எத்தனை
எழில்சூடிப் போகிறது
வாழ்வு.
எல்லாம் உன் 
வரவால் 

November 03, 2012

௱௮

ஊர் நகரும் 
ஒவ்வொரு பயணம் 
உச்சரித்தே செல்கிறேன் 
உயிர் நகர்த்தும் 
உன் பெயரை!

November 02, 2012

௱௭

சேமித்து வைத்த ரணதருங்கள் சிலதை காணோம்.

பழைய புன்னகைகள் ஊடே சில புதுவாசத்துடன்.

கண்ணீர்த்துளிகள் சிந்திய இடங்களில் சிரிப்பின் ஒலிகள்.

துருவேறிய முள்கீறும் வழமை வழிகளிடை மலர் சுகந்தம்.

ஈரத்தலையனையில் மறந்து போன தாலாட்டின் புது மெட்டு.
...
...
...
...
நிறம் மாற்றிய பூக்களோடு 
நீ வருகிறாய் புன்னகையோடு.

November 01, 2012

௱௬

அலைபேசி முத்தங்கள் 
ஆயிரமாயிரம் 
ஈந்தாலும் 
ஈடாகது  
ஒற்றை 
எச்சில் முத்தத்திற்கு, 
என்றாலும் 
கானல் நீர் 
குடித்து 
தாகம் தீர்த்துக்கொள்கிறோம் 
இப்போது.