July 31, 2012

௧௩


"பிணக்குகளில் 
பிணங்கி 
பின் 
இணங்கி" - என்றொரு 
காலச்சுழற்சியில் 
நகரும் நாட்களிடை 
சொல்லி வைக்கிறேன்.

இணக்கமெனும் 
ஒற்றைப் புள்ளியாய்
தேய்ந்து மாயுமிந்த 
வட்டப்பாதை - வெகு விரைவில்.

July 30, 2012

௧௨

ஊடல் கோபங்களில்
தர்மநியாயங்களேது
ஊமையென்றிருப்பதுமாகாது.

யாசித்து யாசித்து
காத்திருக்கிறேன் ....

விரல் மடக்கி
மார் குத்தி
சண்டையிட்டு
தோள் சாய்ந்து
சமாதானமாகிடு.

July 29, 2012

௧௧

விழியுரைக்கும்
வலி மறைப்பாய்
இதழ் முறுவி ....

குரலுணர்த்தும்
வதை மறைப்பாய்
விரல் தழுவி....

என் மனவேதனைகள்
தவிர்த்திட நின் ரண வேதனைகள்
மறைக்கிறாய்

'சொல்லித்தெரிவதில்லை'
ன்மதக்கலைக்கு மட்டுமல்லடி.

July 27, 2012

பயணங்களில்
பிரிந்திருப்பது எங்ஙனம் 
தோழி,
எண்ணச்சாலைகளெங்கும்
நிறைந்திருக்கிறாயே.

July 26, 2012

தேடல் சுகமது 
சொல்லில் அடங்காது

அன்பின் ஆழநீளங்களை
தேடியடைவதே பேரின்பம்...
சிற்றின்பம் தருவதாயில்லை
தேடு!

July 25, 2012

முரண் கருத்தெழும் 
மௌனப்பிணந்தூக்கி அலைவதேன். 

சிரித்திட தலைபடு.

July 24, 2012

உன் மகளுக்கு 
என் முகச்சாயல் வேண்டும்! 
உன் சாயலில் ஒருவரும் வேண்டாம்.
நீ தனித்துவமாயிறு 
எனக்கு.

July 23, 2012

தனித்திருந்த இலையுதிர்
காலமொன்றில்
இப்படி ஒரு மழையுதிர்
காலம் வேண்டி
காத்திருந்தேன்.
***
மெல்லப்  புணர்வதொருவகை,
உடல் கதற
விழிநீர் உதிர
உயிர் கொல்லப் புணர்வதொருவகை.
***
காத்திருந்த மழைக்காலம் வாயித்துவிட்டது...
வாய்ப்புகளில் வாய்ப்பானதை வாய்ப்பாக்கிக்கொள்ளவேணும்.

July 22, 2012

ஒவ்வொரு இரவாக
கழிப்பதற்குள் போதுமெண்றாகிவிடுகிறது,
யுகயுகமாய் தொடருமொரு
பாதிக் கனவை சுமந்தபடி.
யுகயுகமாய் மிச்சம் வைத்துப்போகும்
அந்த பாதி முத்தத்தை எப்போது தருவதாக
உத்தேசம்.

எனக்கு இப்போது
கலவியை விட இந்த
மிச்ச சொச்ச எச்ச
முத்தத்தின் மீது தான் கிறுக்குபிடித்திருக்கிறது.

யாசித்துப் பெறுவதில் தான்
முத்தத்திற்கு பெருமை – காதலில்

இதோ மண்டியிட்டு
யாசிக்கிறேன்  .....
அந்த மீதி
முத்தப் பிச்சையிடு.

July 21, 2012

விரல் இடுக்குகளில் ...
காதோர ரகசியங்களில் ...
இதழ் மீந்த ஈரங்களில் ...
கரம் பொதிந்த கன்னங்களில் ...
தலை சாய்த்த தோள்களில் ...
உடலெங்கும் மிச்ச்சமிருக்கிறாய் நீ.
தனிமை பசியெடுக்க
எடுத்து புசித்துக்கொள்கிறேன் நான்.

July 20, 2012

மழையை பிரசவித்து
பிறப்பெடுக்கும் விடியல்களில்,
கதகதப்பு தேடி நீளும்
கரங்களின் மெல்லிய அணைப்பும்...

களைந்த தலைமுடி ஒதுக்கி
நகரும் விரல்களின் தீண்டலும்...

அர்த்தமற்று
அனிச்சையாய்
மார் பதியும் முத்தமும்...

இன்னும் என்னென்னவோ என்ற
கற்பனைகளில் கழிகிறது
சாளரத்தில்
சொட்டிக் கொண்டிருக்கும்
மழை நீர்
பார்த்து விடியும்
ஒவ்வொரு விடியலும்.


July 19, 2012

நேரம்,
இவ்வளவு மெதுவாக
நொடிகளை ஒருபோதும் கடத்தியதில்லை...

தூரம்,
எல்லைகளற்று இப்படி
விரிவடைந்து கொண்டே போனதில்லை...

தனிமை,
இத்தனை கொடூரமாய்
என்னோடு பழகியதேயில்லை...

'ப்ரிய'மானவளே
பிரிவுணர்த்தியது போதும்
அருகிரு!

July 18, 2012

ஒரு ஜென் துறவி
தேநீர் அருந்துவதை போல,
காலை சூரியன் பனித்துளியை
உறிஞ்சிக்கொள்வதை போல,
பெருமழைக்கு முந்திய மேகங்கள் காற்றின்
ஈரப்பதமனைத்தையும் வெகுமெதுவாய் புசிப்பதைபோல,
அன்பிற்கினியவர்களுக்கு இடையிலான சண்டைச்சத்தங்களை
முடிவிலியற்ற அடர் மௌனம் விழுங்கிக்கொள்வதை போல,

முழு ஈடுபாட்டோடு,
எந்த சலனமுமற்று,
வெற்றிடத்தை நிரப்பும் காற்றென
அனிச்சை செயலாய்
என்னுள் நிறைந்திருக்கும்
உன்னுள் நிறைகிறேன்.