September 30, 2012

௭௪

மின்னொளி அனைத்து 
மூன்றாம் பிறை 
வானம் காட்டி
மடியில் கிடத்தி 
விரல் பிடித்து
நகம் நெருடி
ஆயிரமாயிரம் யுகக்கதைகளை 
ஓரிரவில் 
சொல்லிட எத்தனிக்கும்
கிறுக்குச்சிறுக்கியுன் 
பைத்தியக்காரத்தனங்களுக்கு 
எல்லையேயில்லை...

September 29, 2012

௭௩

விரல் சொடுக்கி
பாசமளக்கும்
விளையாட்டுகளில் 
எப்போதும்
வெற்றி எனது.

நன்றி : விரல்கள் உனது.

September 28, 2012

௭௨

"நளினம் தெரியாதுனக்கு"
என்பேன்,
"கற்றுத்தா"வென்பாய் 
நாணமின்றி...

நாசுக்காய் முத்தமிட அறியாயென்றால்
"நானென்ன செய்ய., பழக்கமில்லை"
என்பாய்...

"சிருங்கார ரசம்" 
தெரியுமாவென்றால்
"மிளகு ரசம் கூடத் தெரியாதே" என்பாய் 
உச்சி முளைக்கும் 
கோபம் கிளப்பும் நகைச்சுவையில்...

எத்தனை "தெரியாதுகள்"
உன்னிடம்.

இந்த "தெரியாதுகளின்"
துளைகளில் 
இட்டு நிரப்ப 
என்னிடம் உண்டு
ஏராள 
சங்கதிகள்.

September 27, 2012

௭௧

தோள் சாய்ந்து,
விழி மூடி,
தூங்குவதாய் 
பாசாங்கி 
மெய் கனவுகாணும் 
உன் வாடிக்கை 
செயலுக்காகவே 
நிகழுமிந்த
மாலைச்
சந்திப்புகள் 
மனமெங்கும் 
மனம் பரப்பி நிறைந்திருக்கும்.

September 26, 2012

௭௦

விளக்கிச்சொல்லிட
விளங்கிகொள்ளுமுன்
விழிகள் 
என்னை கண்டடைந்த 
நொடி 
பிறந்தேன் 
மறுபடி நூறுமுறை.

September 25, 2012

௬௯

வரு பிரிவினிறுக்கந்
தாளாது 
பிரியமனமின்றி 
ப்ரியம்பொழியும்
ப்ரியசகியுன்
ப்ரிய அழுத்தங்களிலென் 
பிழைதிருத்திக் கொள்கிறேன்.

September 24, 2012

௬௮

நிலவொளியில்
பனிமழையில்
மடிபுதைந்து
நொடி மறந்து 
இருள் தொலைக்கும்
புதுயிரவு 
நிலைத்திடுமா
விடயல்தனை 
இனிமறந்து.


September 23, 2012

௬௭

விரல் தடவிட உடன் பறந்திடும் குளிர் நோவு,
இருள்சூழ் மழையிரவில் கேசப்பெருவளியிடை தொலைத்திடும் மெய்,
நாளிதழ் படிக்கையில் பின்னிருந்து காதுமடல் கவ்வும் இதழ்கள்,
மார்முட்டி சண்டையிடுமுன் கரம் பற்றி மார்சேர்த்தனைத்து கழியும் பொழுது,
பொங்கிவரும் கண்ணீர்த்துளிகளை உன் மார் பாய்ச்சுமென் விழி,
.
.
.
.
.
.
என் பால்யமெங்கும் கொட்டிகிடக்குமிந்த  கனவுகளின் 
நாயகி நீ!

September 22, 2012

௬௬

உன்னுடனான 
சொல்லாடல்களில்
மெல்லப்படருமென்
ஆணாதிக்கம் கண்டு 
நகைக்கிறதென் புத்தி.

இதுவல்ல நான்!

தொலைந்த 
என் 
தனித்துவத்தை 
மீட்டெடுக்க உதவிடு.
ஒவ்வாததில் முரண்படு.

September 21, 2012

௬௫


நேர்படும் பிழைகள்,
உடைபடும் மௌனம்,
தெளிவுறும் நேசம்,
மிகுபெரும் பாசம்
என பலதரும்
இந்த
சின்னைச்சண்டைகள் 

யாவும்
நாம் 
பின்னால் மகிழ்வுற 
இந்நாள் நிகழ்வுறும்
தங்கத்தருணங்களடி.

September 20, 2012

௬௪

ரணம் 

மறைத்து, 

இதழ் 

சுளித்து,

விழி 

களைத்து,

விரல் 

பிணைத்து,

உடலுதறிய

உயர் பருகிய 

முதல் கலவியை 

தினம் கொடடி.

September 19, 2012

௬௩

சில்லிட்ட 
கைகளால் 
கன்னம் வருடி,
மடிமேல் கிடத்தியொரு 
மழைக்கவிதை சொல்...

உள்ளூர நனைந்திட ப்ரியம் கொண்டனன்.

September 18, 2012

௬௨

ரகசியம் 
சொல்வதென
பாசாங்கி 
நீதரும்
காதோர 
முத்தத்திற்காய் 
காத்துகிடக்கிறேன்.

September 17, 2012

௬௧

'நகங்கிழித்த 
காயங்களிடை 
நேசங்காட்டி வருடி, 
காயமேற்பட்ட
நினைவு மேலிட
ஏதோ 
நினைத்துச் சிரிக்குமுன்'
நிழற்படமொன்று 
நெஞ்சில் நீங்காது
நிறைந்திருக்குது, போடி.

September 16, 2012

௬௦

சொல்லற்ற
தருணங்களில் 
முத்தம் 
கொண்டு ஆரம்பிக்கிறாய் 
நின்
மொழியாடல்களை.

September 15, 2012

௫௯

உடலதிரும் 
இதழுதறும்
நொடியைடையே 
விழிபகிரும் 
மொழிபருகி 
மனமுருகி 
சினமருகி
கரமெடுத்து
விரலணைத்தென்
உயரழுத்தம் 
குறைப்பாயுன் 
கதகதப்பில்.

September 14, 2012

௫௮

பிணிவர 
கழியுமென் நாட்களிடை  
பொழியுமுன் 
ப்ரிய'ங்களின்  
ஈரப்பதமுணர்த்தும் 
அழுத கண்ணீர் 
மறைத்து 
அன்பொழுகும் 
நின் 
'ப்ரிய' காதல்.

September 13, 2012

௫௭

குழந்தை மொழிபேசி 
நாம் 
குலவிக்களித்த
பொழுதுகளிடை
நீ 
கொணர்ந்த 
என்
பால்யம் கேட்கிறது 

"எங்கிருந்தாளிவள் அந்நாளில்?"
என.

September 12, 2012

௫௬

நாட்குறித்த
நாள் குறித்த 
'நாண'மெழ
நாம் சிரித்து 
நாள் கடத்தும் 
நாளுமானதிந்த
நாளும்.

September 11, 2012

௫௫

பொங்கிவரும் 
பெருங்கோபம் 
தடுத்தாளுமுன்
குறுநகைக்கு 
பரிசாகுமென்
சினந்தொலைத்த  
விழி மொழியும்
புகழ்மொழிகள்.

September 10, 2012

௫௪

அடைமழை
பெய்தோய்ந்த 
பின்னிரவொன்றில் 
நின்னை 
அழவைத்துப்போன 
பெருந்தவறுணர்ந்திட
உயிர் கவ்வும் 
சோகம் 
நெஞ்செல்லாம் நிறைந்தென்
மொழிதின்று போனது.

விழி கவிழ்ந்து 
மௌனமாய் கேட்கிறேன்
மன்னிப்பும்,
மறுதலிப்பற்ற 
மாற நின் பேரன்பும்.

September 09, 2012

௫௩

அருகில்லா 
பொழுதுகளில் 
நோயுற்ற
நின் 
ரணமிகும் 
தருணமே 
பிரிவறிவித்த
எனக்கான 
பெருந்தண்டனை.

September 08, 2012

௫௨


வலி பொறுத்து
இதழ் சிரித்து
நீயாடிய 
நாடகங்கள்,

நின் 
விழியோரம் நனைத்து 
வழிந்த 
ஒற்றைத்துளி
கிளப்பிய 
ரணம்
மறைக்க 
பேருதவி புரிந்திட்ட 
ரகசியம் 
நீறிந்திருக்க 
வாய்ப்பில்லை 
தோழி.

September 07, 2012

௫௧


அருகிருக்கச்சொல்லி 
அழைக்குமுன் 
விழிகளை முந்திக்கொண்டு 
அணைக்குமுன் 
கரங்களின் கதகதப்பில் 
தொலைந்து போகிறேன்.

September 06, 2012

௫௦


பெருமகிழ்ச்சிக்குள்ளும் 
சிறுசோகம் மறைத்து 
கண்ணீர் 
சிந்துமுன் வாடிக்கை 
எனக்கு புரிபடுவதேயில்லை.

'ஆணாகிப்போன காரணத்தால்'

September 05, 2012

௪௯


புரிந்து
தணிந்து
தலை கவிழ்ந்தென்
தவறுணர,
இமை மூடித்திறந்து 
சொல்லேதுமின்று 
'போகட்டும்" என்பாயே 
கோபச்சொல் சுட்ட 
ரணம் மறைத்து.

September 04, 2012

௪௮


மறுப்புச்சொல்லி
கன்னங்காட்டும் 
நின் 
முத்தத்தேவை 
தீர்ப்பதாவென 
யோசிப்பதற்குள் 
எச்சில் படுத்திப்போகிறாய் 
என்'கன்னங்களை.

September 03, 2012

௪௭


பிரிவறிவிக்க
சோகம் சூடும் 
நின் முகமெண்ண 
மறைந்திடும் 
"நெடுநாள் பிரிவறுக்கும்
கடைநொடியில்
புதுப்பொலிவு பூசிவருமுன் 
மென்புன்னகை பூத்த 
முகம் 
காணுவதற் பொருட்டு 
ஆயிரம் பிரிவுகள் காண"
துளிர்விடும் 'ஆசை'

September 02, 2012

௪௬


பொழுது சாயும்
பொழுதெல்லாமுன்
வாசமெடுக்கிறது
எனக்கு.

தூரத்திருக்கும் 
பொழுதுகளில் 
துரத்திவந்து
நிலைத்திருக்குமிந்த 
சுகந்த பெருக்கின் 
சூட்சமமறியும்  வேட்கையிழந்து
மயங்கிக்கிடக்குதென்
மதி.

தொலைவிருந்தும் 
அருகிருக்கும் 
அதிசயமறிவி
எனக்கும்.

September 01, 2012

௪௫


அன்பெழப்பேசுமுன் 
சொற்களை 
தப்பர்த்தம் செய்யுமென் 
செயல்களை 
எங்கனம் தொலைப்பதென்றெண்ணி 
நகருமிந்த 
பிரிந்திருக்கும் பொழுதுகள்.