August 31, 2012

௪௪


பிரிதலும்
பிரிதல் நிமித்தமும்.

பாலை நிலவாழ்வாகிப்போன 
காதலில் 
நினைந்து
நினைந்து
நினைவெல்லாம் 
நிறைந்துகிடக்கிறது 
நெஞ்சம் நிறை காதலும்
இதழ் நிறை முத்தமும்
ஆலிங்கன மிச்சமும் 

August 30, 2012

௪௩


மனமேடையொன்றன்
முன் நின்றென் 
மணநாள் குறித்தொரு 
சிறுகனவில் யான்.

நிகழ்கால காட்சிகளில் 
முகம் மாற்றியொரு 
நிகழ்வை 
நிகழ்த்திக்காட்டுகிறது
மனம்.

நீயென் கரம்பிடித்தபடி 
நானுன் புன்னகைக்குள் 
ஒளிந்து கொள்ளுமந்த 
நாளை எதிர்பார்த்து 
மனம் நகரும் 
மாலையிது.

August 29, 2012

௪௨


நூற்றி சொச்ச நாட்பழக்கத்தை 
ஆயிரமாயிரம் யுகங்கலென
உணர்வுறுமிந்த
மனஞ்சொல்லும்
'நாம் வாழ்ந்த'
பெருங்கதைகள் 
கேட்டு 
விடியுதிந்த 
தனிமை தோய்ந்த 
ஊரோடும் பயண ராத்திரிகள்.

August 28, 2012

௪௧


விரும்பியேற்கும்
பிரிவுகள் தரும்
ரணங்கள்,
பிறிதொருநாள் 
இணைகையில் 
நிரம்பி வழியும்
விழிநீர் காண மறையும்.

August 27, 2012

௪௦


தொடர்நிகழ்வென 
நீ கேட்கும்
மன்னிப்புகளில்
புண்ணாகிப் போகிறது 
நெஞ்சம்,

இன்னும் 
நினக்கு 
விளங்க முடியாதவனாகி 
போனேனோவென.

௩௯


நேரங்கடத்தும் 
கற்பனைகளின் 
நீளத்தினூடே
கழியுதிந்த நாட்கள்.

கற்பனைகளத்தனையையும் 
அரைநொடிப் பார்வையில்
பூர்த்தியாக்கி 
புன்னகைக்கிறாய்.

இத்தனை விரைவாய் 
நீ 
காரியமாற்றினால்,
இனி 
எத்தனை விரைவாய் 
யான் 
கற்பனையாற்றுவதோ ?

August 25, 2012

௩௮


இறுக அணைத்து
இதழ்மேலொரு 
நீள்முத்தமிட்டு
'போதுமா ? 'வென
எதிர்மறை பதிலெதிர்பார்க்கும்
உன்
சாமர்த்தியம் கண்டு 
தோற்குதென்
சாணக்கியம். 

August 24, 2012

௩௭


புரிந்து கொண்ட 
பிறகு 
சண்டையிடுவதாய்...

மகிழ்திருக்கும் பொழுதில் 
கண்ணீர் 
உகுப்பதாய்...

பிரிந்திருக்கும் நொடிகளில் 
வெகுநெருக்கமாய் 
அருகிருப்பதென ...

எண்ணற்ற 
மாயங்கள் 
காட்டுதிந்த காதல்.

௩௬


சுகித்திருந்த 
தருணங்களின்
நினைவு மேலிட,
நெஞ்சோரம் 
நெருஞ்சிமுள் 
கிழித்த வலியெழும் 
நின்னை 
அழவைத்து 
தவறிழைத்த நொடிகள்.

August 22, 2012

௩௫


நீ எழுப்ப
விடியும் காலைகளுக்கான 
காத்திருப்பில் 
கழிந்த 
இருபத்தேழாண்டு 
கனவு
சுமந்து காத்திருக்கிறேன். 
ஒவ்வொன்றாய் 
பகிர.

August 21, 2012

௩௪


நீள் பிரிவறுக்கும்
மாலை கருக்கலில்
காத்திருப்பின் 
மௌனமவிழ்க்கிறது 
தூரத்தெரியும் 
புன்னகை சுமந்த நின்னிதழ்கள்.

August 20, 2012

௩௩


சின்னச்சின்ன 
தூறலென
நின்னைத் தீண்டுமின்பப் 
பேரின்ம்பம் வேண்டி 
சேமித்து வைத்திட்ட
காதலத்தனையையும் 
ஆழிப்பெருமழையென
கொட்டித் தீர்த்திட 
ஆசைகொண்ட 
முதல் முத்தமிதோ.

உம்மாஆஆஆ 

August 19, 2012

௩௨


சுழல 
மறுத்து 
சுணங்கும் 
நொடிகளை
விரட்டி தேய்கிறதென் 
கடிகார முள் 
பார்த்து நகரும்
நின் அருகிருக்கும் 
அருகதையற்ற நாட்கள்.

தனித்து 
பசித்து 
விழித்து

இருக்கிறேன்.

August 18, 2012

௩௧


மௌன மருந்திட
எத்தனிப்பது வீண் 
சொல் கிழித்த 
காயங்கள் 
சொற்களிம்பிட
மட்டுமே ஆறும்.
மனந்திறந்து 
இதழுதிர்க்கும் 
வார்த்தை 
மருந்திடலாம் வா.

August 17, 2012

௩௦


சண்டைகளுக்கு
பிறகான
மொழியாடல்களில்
அதிகம்
அர்த்தப்படுவது
மௌனங்கள் தான் தோழி.

இத்தருணங்களில்
வார்த்தைகளையல்ல
மௌனங்களை
சேமித்திரு!

August 16, 2012

௨௯மௌனத்தை
சினமென
அடையாளமிடும்
நின்
பேதைமை கண்டு
உடைகிறதென் மௌனம்.

பொங்கி வரும்
காதல் மொழிகளில்
மூழ்கிதொலைந்திட
தயாராயிரு.

August 15, 2012

௨௮


விழிகளால் 
புன்னகைக்கிறாய்,
இதழ்களால் 
பரிமாறுகிறாய்,
விரல்களால் 
நேசமுரைக்கிறாய்,

அனிச்சையாய் புரிந்து கொள்கிறேன்.

August 14, 2012

௨௭


முதல் முத்தத்தருணம்
மறந்தொரு
சுவையாரநினைவிழந்து
தவிக்கிறேன்.

இறுகப்பற்றியொரு
நீள்முத்தமிடு...

முற்பிறவி
முத்தங்களும் கூட
நினைவுமேலெழுந்திடட்டும்.

August 13, 2012

௨௬


காலந்தவறி வந்துசேரும்
கவிதைகள்
அலட்சியத்தினடையாலமல்ல,
காத்திருப்பின் பொறுப்புணர்வு,
வார்த்தைத்தேர்வின் நேர்த்தி,
உயிர்தொடும் நேசத்தின் அடர்த்தி.

உனக்கு மட்டும்
புரியும் மொழியில் சொல்வதானால்
"போடி"

August 12, 2012

௨௫


தவறிழைத்து கோரும்
மன்னிப்புகளை
மறுதலித்து,
கரம் பிடித்து,
புறங்கையில்
முத்தமிட்டு,
மௌனமாய்
தோள் சாய்ந்திடுகிறாய்.

பொறுப்புணர்வு கூடிக்கிடக்கிறேன்.

August 11, 2012

௨௪


நின்
நேசமுணர்த்தும்
என்
நோவுகளில்
மகிழ்ந்திருக்கிறேன்.

உன் கரம்
பட தீரும்
என் நோய்கள்
இன்னும் சற்று நேரம்
இருந்துவிட்டு போகலாம்.

நீ
அருகிருக்க
விலகிடும் பிணிகள்
நீ
தொலைவிருக்க
அருகிருக்கட்டும்.
என்னைப்போல் நின் வரவையெண்ணி.

August 10, 2012

௨௩


தோள்சாய்ந்து
விரல் கோர்த்து
தலை கோதி
மகிழ்ந்து
சோகமாகி
மௌனமாகி
சண்டையிட்டு
சமாதானப்படுத்தி 
ஊட்டிவிட்டு பசியாறி
ஊடலிட்டு உறவாடி
என
எல்லையற்று
வளைந்து வளைந்து
நீளும் சாலைகளின் ஊடாக
விடிகாலையொன்றில்
தொடங்கும்
நெடுந்தூரப்பயணம்
உன்னோடு வேண்டும்.

August 09, 2012

௨௨


நீ நிகழ்த்திக்காட்டும்
மாற்றங்களில்
புரண்டு கிடக்கிறதென் பூமி.

எனக்கு அறிமுகமில்லாத
என்னை
உலகுக்கே அறிமுகபடுத்தியவள் நீ.

என் புன்னகையில்
பொறுப்புணர்வு
கூடியுள்ளதாக நண்பன் உரைக்கிறான்.

நீ தானே காரணம்.
உன்னால் நான் புதியவனாகவில்லை
பொலிவு பெறுகிறேன்.

August 08, 2012

௨௧


கன்னச்சுழிவுகளில் ஒளிந்திருக்கும்
கள்ளப்புன்னகை,
இதோழாரம் தேக்கி வைத்திருக்கும்
திடீர் முத்தம்,
மென் புருவநெரிப்புகளிடை நிகழ்த்தும்
ஒற்றை இமையாடல்,
மெல்ல கோர்த்த விரல்களிடை நொடிகளுக்குள்
இறுக்கமதிகரித்துக்காட்டும் நேசம்...

என

நம்மிடையான மொழியாடல்களில்
உன் மறையாக்கங்களை
மறைவிலக்கி புரிந்திட எனக்கு மட்டுமே சாத்தியம்!

August 07, 2012

௨௦


நின்னோடு
சினமெழுந்து
மொழியுமிழ்ந்து
கடந்த நொடிகளிடை
மீள் பயணம் செய்திட
உணர்கிறேன்...
நின் கண்ணீர் வெப்பம்.

மூடன்!
சுடச்சுட வார்த்தைகளை கொட்டியது யான்!

August 06, 2012

௧௯


பிரிய மனமில்லாது
பிரியங்கள் குவியமிடும்
பிரிவு நாட்களுக்கு
முந்திய மாலை பொழுதுகளில்
பிரிவுணர்த்தி
விழிநிரப்பி பிரிந்து செல்கிறாய்!
கண்ணீரால் மட்டுமல்ல!
கண் முழுக்க நிறைந்திருக்கும்
நின் பிம்பங்களாலும்!


௧௮


புரியாத நின் ப்ரியங்களை
கடிவாளங்கள்
என்றெண்ணிக் குழம்புகிறேன்.

உயிர் நீளுமுன் நேசத்தை
வார்த்தைகளால்
கீறி ரணமாக்குகிறேன்.

நான் இத்தனை குழப்பவாதியென்பதும்
நீ எத்துனை நேசக்காரியென்பதும்
எனக்கு எப்போதுதான் புரிபடுமோ.?