February 22, 2014

நினைவு

அரையுறக்க
நினைவுதப்பிய 
தேடலில்
கையெதிர்படும்
பஞ்சுப்பொதி,
மறுபடியும்
நினைவுறுத்தும்
தனிமையுணர்ந்து
தன்னிலை
மறந்துறங்கிய
பின்னிரவை.

மறவேன்

நேற்று
நடந்த
நிகழ்வெனத்
தோன்றும்
நம்
முதல்
சந்திப்பில்
நாணமொட்டிக்கொண்டிருந்த
உன்
முகம்
அலுப்பதேயில்லை.

பொருள்

காத்தருப்பகளில்
பொருள்படுகிறது
அருகின்மையின்
காரணங்கள்.

வழி

கேலிகள்
வடம்பிடித்திழுக்கும்
வம்புகளெல்லாம்
ஊடல்
வழியோடும்
கூடல்
வாய்ப்புகளாய்.

காரணம்

புன்னகைகளை 
மட்டுமல்ல
கண்ணீர்த்துளிகளையும்
மனம்
கணக்குவைப்பதில்லை,
காதல்
நாளும்
வளர
அதுவொன்றே
பெருங்காரணம்.

February 14, 2014

பெருங்கனவு

பிரிதலும்
பிரிதல் நிமத்தமும்
அற்றதொரு
காலப்பெருவெளியில்
உன்னோடு
கழனியேறி,
களைபறித்து,
உழுதுண்டு வாழும்
கனவுன்டு
தோழி

தவம்

நெஞ்சேறியுறங்காது
மௌனங்கள் பேசு
மணிக்கணக்கில்
கேட்டிருக்குறேன்.

கருவி

தூரமறுக்கும்
கருவியொன்றிதுவரை
கண்டுபிடிக்காமல்
இருப்பதன்
காரணம்
புரிபடவில்லை
'தேவை' 
என்போலெத்தனை 
உள்ளங்களுக்கு

நன்றி

தொலைவிருக்கும்
இரவுகளில்
அருகிருந்தென்
துயர்
துடைக்குமுன்
நிழற்படங்களிடம்
நன்றி
காட்டுவதில்லை நான்
உடனிருக்கும் பொழுதுகளில்.

மடிகொடு

தனித்துறங்கும்
இரவுகளில்
தலையனையென்று
எண்ணுவதில்லை
பஞ்சுப்பொதியை,
உன் மடியாகி
தலை வருடும்.

வழி

பொய் கொல்லும்
வலியெழ
இனியொருக்கிலும்
இடந்தறேன்,
மெய் வலி 
வழி இனி.

February 04, 2014

புலன்

செவி
திறந்து 
கேட்டிருப்பேன்
இனியெப்போதும்
முத்தமிட
மட்டுமே
வாய் திறப்பேன்.

February 03, 2014

கடிதம்

வார்த்தைகளும்
மௌனங்களும்
விளங்க வைக்காததை
எழுத்துகள்
சாத்தியமாக்குமென
எண்ணியிருக்கவில்லை.

கண்ணீர்
வழிந்தோட
எழுதியிருந்த
கடிதத்திற்கு நன்றி!

February 02, 2014

தயார்

தூரமேகும்
பயணங்களுக்கு
நான்
தயாராகும் முன்
உனக்கான
தயாரிப்புகள்
தொடங்கிவிடுகிறது.

February 01, 2014

துயிலறு

நெஞ்சேறி
உறங்கடி,
இரவெல்லாம்
விழித்துன்
குழல்
கோதிக்கிடக்கிறேன் 
கோடி முறை.

January 31, 2014

தனித்திருந்தேன்

தனித்துறங்கும்
இரவுகளில்
தலையனை
தேவையிருப்பதில்லை,
உனக்கான
அணைப்புகள்
எதற்குமானதல்ல.

January 30, 2014

பூ

ஆயிரம்
ஒற்றை ரோஜாக்கள்
அணிந்துகொள்,
முழம்
மல்லியணிந்து கொல்லாதே!

January 29, 2014

விதி

எதன் பொருட்டும்
பிரிவேற்க
மறுக்கிறது
மனம்,
அதுபற்றி
யாதொரு 
கவலையுமின்றி
விளையாடித்
தீர்க்கிறது விதி.

January 28, 2014

சமாதானம்

பெருஞ்சண்டைக்கு
பின்
ஏதுமொழியாமல்
முத்தம்
தந்து போகிறாய்,
அதுதான்
சமாதானமென்றறியாமல்
இன்னும்
பிணங்கியபடி
நான்.

January 27, 2014

சமன்

வெப்பச்சமனிலை
வேண்டித்தான்
முத்தம் தந்தேன்,
சமனிழந்து
துடிக்குது மனம்.

January 26, 2014

உன்னதம்

நீயுறங்கி
நான்
பார்த்தருக்கும்
தருணங்களே
"வாழ்வின் உன்னத நொடிகள்"
எனப்படுவது.

January 25, 2014

உணவு

உன் அன்பை
உண்டு உண்டே
என்
சுயநலச்சட்டை
உரிக்கிறேன்.

January 24, 2014

மடி கொடு

கவலைகள்
எல்லாமுன்
மடிசாய்ந்திட
சரியாகுமென
நம்புகிறாய்,
நானும்
நம்பத்தொடங்குகிறேன்.

January 23, 2014

துயிலறு

சிறுபிள்ளையென
மடிமீதேறியுறங்குமுன்னை
எழுப்ப மனங்கொள்ளாது
நெடுநேரம்
விழித்திருக்கும்
இரவுகள்
பல்கி பெருகட்டும்.

January 22, 2014

கொடை

எல்லாப்
புரிதல்களுக்குப் பின்னும்
முளைத்தெழும்
பிணக்குகள் போல
எல்லா 
பிணக்குகளின் பின்னும்
துளிர்விடுகிறது புரிதல்.

இம்மாயச் 
சுழற்சியில்
வலுப்பெறும்
நேசம்
நம் கொடை!

January 21, 2014

தூரக்கண்ணீர்

நின்
கண்ணீர்
தாங்கும் வல்லமையற்றவன்
என்பதால்தானோ
என்னவோ,
எல்லா
சண்டைகளும்
தூரமிருக்கையில்
நிகழ்ந்தேருதோ?

January 20, 2014

காலப்பசி

ஒன்றாயுறங்கி
ஓரிரவாவதற்குள்
கதவைத்தட்டியழைக்குதிந்த
காலப்பேய்,
உன் பசலையுண்டே
பசியாறும் போல.

January 19, 2014

காலம்

காலத்திடம்
கணக்குவழக்கற்ற
கோபத்திலிருக்கிறேன்,
பிரிதல் நிமத்தமாய்
சேர்த்துவைத்துப்
பார்க்கிறது நம்மை.

இன்னுமெத்தனைக் 
காலமென
கணக்கு கேட்க வேண்டும்.

January 18, 2014

பயணம்

நினைவெங்கும்
நீ
நீள்
பயணம்
செய்தபடியிருக்க,
பாதைகளில்
கவனமின்றி
பயணிக்கிறேன்.

January 17, 2014

வழமை

புன்னகைக்குள்
மென் சோகம்
மறைக்குமுன் 
வழமையறியாது
நிலைமை
சரியெனயெண்ணும்
பேதையாய் நான்.

January 16, 2014

தூரம்

தொலைவேக
நோயுறும்
நீயொரு
விந்தைப்பிறவி,
இனி
தூரம்
தூரமாகட்டும்
நமக்குள்

January 15, 2014

காலை

குழந்தையென
நெஞ்சேறியுறங்குமுன்
சிரம் கோதும் விரல்களும்
இமை மோதும் விழிகளுமென
மெல்ல நகரும்
காலைகளில்
தேநீர்
தேவையாயிருப்பதில்லை.

January 14, 2014

நேரம்

பிரிவறுக்கும்
கலவியின்
வேகமும்
வியர்வையும்
முயக்கமும்
மயக்கமும்
பிறநேரக்
கலவிகளில்
ஒருபோதுமில்லை.

January 13, 2014

கலை

நேரமெடுத்து
நெடுந்தூரங்கடந்து
நின்
கண்கள் நோக்கியென்
கால்கள் நகர,
கைவிரல் கொண்டென்
கன்னந்தடவி
களைப்பு நீக்கும்
கலையெங்கு
கற்றாய் தோழி?

January 12, 2014

தனிமை

நீயற்ற
தனிமையை
இட்டு நிரப்ப
இரவுகளில்
இருள் கூட
போதுவதில்லை,
இருகரம் கோர்த்துன்
இடையிடையே
உறங்கிப் போன
நாட்களின்
நினைவு பற்றி
நேரமிழக்கிறேன்.


January 11, 2014

பிழை

என்
குரலுயர்த்தி 
நின்
மொழியமிழ்த்தி
என் பிழை
மறைக்கின்றேனென
உணர்ந்திட
நீ படும்
சோகமென்
நெஞ்சழுத்திக் கொல்லும்.

January 10, 2014

பாசம்

எக்கரையிலிருந்தாலும்
அக்கறை
விசாரிப்புகளில்
முந்தியிருப்பவள்
நீ!

January 09, 2014

அருகிரு

நினைவுதப்பி
களைப்பு மேலிட 
உறங்கிப் போனதொரு
மதியநேரம்
சட்டென 
விழித்தெழுந்து
உனைத்தேடும் 
விழிகள்
எந்த சாமாதானமும்
ஏற்பதில்லை.

அருகிரு ஆருயுரே!

January 08, 2014

தவறு

நின் இன்மை உணர்த்தும்
வெறுமையையிட்டு
நிரப்பும்
சொற்களறியாமல்
புறமேகியது 
எவர் தவறு? 

January 07, 2014

மருந்து

அன்பொழுக
சில வார்த்தைகள்
அதுவே 
அருமருந்துன்
நோய்தீர்க்கவென்றறிந்தும்
உதிர்க்குதில்லையென்
இதழ்கள்,
காரணம் 
அறியேனென்பதைக்காட்டிலும்
அறிந்தென்ன பயன்?

January 06, 2014

பசலை

நான் தூரமேக 
நின் 
தேகம் நோகும் 
காட்சிகள்
கேளும் மட்டும் 
'பசலை'
வெறும் 
கவிஞர்கள் 
கற்பனையென்றெண்ணி
இருந்தேன்.January 05, 2014

களைப்பு

கலவிக் களைப்பை
கழட்டிக் கொண்டிருந்தது
அணியத் தொடங்கிய 
ஆடைகள்.

உடுத்துவதென்பது
உறுத்தலாகிட
களைவதென்பதே
களைப்பை கலைக்கக்கூடுமாதலால்...

January 04, 2014

பொழுது

வெட்டி
ஒன்றன் மேலொன்றாய்
அடுக்கிவைத்த
ஒற்றை மரத்தின்
இரண்டு பாகங்களென
என்
நெஞ்சோடு படர்ந்திருக்கும்
நின்
குழல் கோதி
பொழுதிழக்கும்
கலவிக்கு முன்னான
அப் பொழுதே
சொர்கத்தின் 
பக்கத்திலிருப்பதென்றுணர்ந்தேன்.

January 03, 2014

தூரம்

பாதைகள் மாறி
பயணங்கள் மாறி 
படுக்கைகள் மாறி
தூரமெண்ணி
துயல் கொள்ளாது
தனிமையில் புரளும்
உடலம்
எப்படியோ விளங்கிக்கொண்டது
நேற்றிருந்த கதகதப்பு
இன்றில்லையென்பதை.

January 02, 2014

வரம்

தேவைகள் 
அறிகிலேன்,
கேட்டதை 
தந்திலேன்,
விரும்பியதை 
செய்திலேன்,
என்றாலும் 
துளியும் மாறா 
நின்னன்பே 
வரமெனப்படுவது.

January 01, 2014

விடியல்

இரவுகளிடம் பயமில்லை,
படுக்கையில்  
பக்கத்தில் 
நீயற்ற 
விடியல்தான் 
பெரும்பயம் 
தந்துசெல்கிறது,
சட்டென விரைந்துவா
இன்னொரு விடியல் எழுவதற்குள்.