January 31, 2013

௱௯௭


வீதியெதிர்  நோக்கி 
நின் விழி,
வாசலெதிர் நோக்கி 
யென் வழி,
இந்நாட்களின் மாலைகள் 
நிகழ்த்திக்காட்டும் மொழி!

January 30, 2013

௱௯௬

தத்தித் தடுமாறி 

செய்திடும் 
புத்தம் புது சமையல் உனது.

தினமொரு ருசியென 
என் அனுபவங்கள் புதிது.

January 29, 2013

௱௯௫


புருவநெரிப்புடன் 
தெறித்து விழுந்த 
ஒற்றை 
கடுஞ்சொல் 
வெம்மை தாழாது 
விழிநழுவி 
புவிபாயும் 
துளிமறைத்து 
புறமேகுவாய்.

உடற்கூசி 
உயிர்மருகி 
தவறுணர்ந்திட்டேன்.
பயனென்னடி?

சொல்கீறிய ரணமாருமோ ?

January 28, 2013

௱௯௪


அடுக்களை இடுக்கிடை 
திடுக்கிடப்பற்றி - நின் 
அக்குள் வெளியிடை 
மென் முத்தம் பதித்திடுமிந்த 
அற்புதக்காலைகள் 
எத்தினம் வருமென 
காத்து விழித்திருந்த 
அத்தனை இரவும் 
மொத்தமாய் 
விடிந்தது காண் !




January 27, 2013

௱௯௩

காத்திருப்புகளின் 
கடைசி மணித்துளிகள் 
நிகழ்த்தும் 
காட்சிப்பிழை நிகழ்வுகளில் 
மாட்டிக்கொள்ளும் அவஸ்த்தை 
பெருஞ்சுவையார சாபம்!

January 26, 2013

௱௯௨

யோசனை தூரங்களிடை 
யோசிக்கும் நொடிப்போதில் 
போய்விட 
யோசனை சொல்வாருளரோவென 
யோசித்துக்கழிக்கிறேன் 
பொழுதை.

January 25, 2013

௱௯க


நாற்புறமும் சூழிட்ட 
சுவர்களின் சூன்யத்தில் 
கழியுமிந்த 
பேரிருளிரவில் 
வெளிச்ச மின்னல் 
வெட்ட 
திடுக்கிட்டெழுந்து 
திக்குகள் நோக்கித்
திரும்பிட 
ஒப்பனை பொம்மைகளாய் 
ஓவியப் பெருந்திரளாய் 
எத்திசை நோக்கினும் 
இவள் முகமே!

January 24, 2013

௱௯௦

காத்திருப்பின் நேரமளந்து 
அயர்ந்தவிடத்தில் 
நிழல்போலாகியென் 
துயர்போக்கியது 
நீரோழுகிய கண்ணங்களின் 
நீண்டமுத்த 
நினைவலைகளே.

January 23, 2013

௱௮௯


தூர மிருந்து
துன்ப மருந்தி 
தூக்க மிழந்து 
யாக்கை வருந்தி 
எப்போது தொலைவிருப்பது 
எத்தனை தொல்லையாய் இருக்கிறது.


January 22, 2013

௱௮௮


தூர மிருந்து
துன்ப மருந்தி 
தூக்க மிழந்து 
நாளை கடத்தி 
நிம்மதியிழக்கவா 
இந்தப் பிரிவும்? 


January 21, 2013

௱௮௭

கண்ணீர் துளிகளை மறைத்துக்கொண்டு 
கையசைத்து சிரித்துக்கொண்டு 
பிரிவெழ 
வழியனுப்பிய நின் வாடிக்கை புரிபட 
வாழ்க்கை பரிசளித்த வேடிக்கை  தருணமிது.

January 20, 2013

௱௮௬


சூழல் ஏதுவாகவில்லை,
பிற்பாடு புணர்ந்து கொல்லலாம்.

தற்போது புணர்ந்து கொள்ளலாம்.

January 19, 2013

௱௮௫


யாருமற்ற தனிமையின் 
நேரமற்ற புணர்வின் 
கோடியின்ப பேருவகை,
சுழுமக்கள் திரளில் 
விழியசைத்து 
விரல் தீண்டிட 
நேர்படுகுதடி. 



January 18, 2013

௱௮௪

குளிர்நிரப்பிய தனியறை 
விடுயெனை எனும் நடை 
விரல்பட வழியும் விரகம் 
ஆண்டுகள் வளர்த்த காமம்
யார்வென்றதெனும்   கேள்வி 
வியர்வை ஊற்றி நடத்திய வேள்வி 
 அடுத்தென்னவெனும் தேடல் 
 அசைவற்ற கலவி 
வறண்ட இதழ்களின் நீண்ட முத்தச்சத்தம் 
மூச்சிரைக்கும் அதிர்வுகள் 
இருளில் ஒளிரும் தேகம்

 ஒவ்வொரு இரவும் புதிது.
ஒவ்வொரு கல்வியும் இனிது. 

January 17, 2013

௱௮௩

யாமார்க்கும் குடியல்லோம் 
யென்றிருந்தோம்,
இறுமாப்பறுத்தென் 
குடியென்றாகியவள் நீ!

January 16, 2013

௱௮௨

மடிசாய்ந்துறங்கி 
பயணிக்குமிந்த 
பயணத்தில் 
அர்த்தமிழக்கிறது 
ஆயிரம் மைல்கள் 
தனித்து 
ஊரோடிய தூரங்கள் யாவும்.


January 15, 2013

௱௮க

எல்லா முத்தங்களையும் 
போல 
எல்லா காலையும் 
ஒன்றுபோலிருப்பதில்லை.

January 14, 2013

௱௮௦

மனைவிப்பொங்கல் ...


நீ வரைந்த தித்திக்கும் குறுங்கவிதை.

January 13, 2013

௱௭௯

உன் 
பகல்கனவுகளை 
இறக்கிவைக்கும் 
இரவுச்சுமைதாங்கி 
நான்!

அற்புதமான பாரம், 
சுமக்கவியலா உன் கனவுகள்.

January 12, 2013

௱௭௮

ஈரமுத்தங்களின் 
ஈர்ப்பும்,
வறட்டு விரல்கள் 
நடை பழகும் 
கேசப்பெருவெளியும்,
விரலிடை 
நசுங்கி வலிதரும் 
பின் கைச்சதை பிண்டமும்,
...
இன்னும் எத்தனை எத்தனை 
அடையாலமாவாய்?

January 11, 2013

௱௭௭

நகரும் பொழுதுகளுக்கு 
தெரியாது 
நாம் நகர்த்திய நொடிகளை.

January 10, 2013

௱௭௬

வெம்மை பகல்போதில் 
மேலாடை ஏதுமின்றி 
நின் 
மார் சாய்ந்துறங்கும் 
பொழுதிடை 
உறக்கமேது ?
கனவுகள் அரிது.

January 09, 2013

௱௭௫

காத்திருப்புகளின் நாயகி நீ!
பயணங்களின் காதலன் நான்!

நல்ல இணைதான் போ!

January 08, 2013

௱௭௪

இருப்புக்கொள்ளவில்லை,
நீ 
இல்லாது நகரும் 
நாட்களை 
எப்படிக் கொல்வதென 
தெரியாமல் 
இருப்புக்கொள்ளவில்லை.


January 07, 2013

௱௭௩

உன்னோடு முரண்பட 
ஆயிரம் காரணமிருக்கிறது.
மடிசாய்த்து 
தலைகோதி 
விரல்சொடுக்கி 
தலைகுட்டி 
நம் தவறுகள் கதைக்க 
ஒரே காரணம்தான்.

ஆம்!
அளவற்ற பேரன்பு.

January 06, 2013

௱௭௨

அழுதொழுகிய 
கண்ணீர்த்துளிகள் 
வெறுப்பின் விதைகளல்ல 
அன்பின் புதுமொழிகள் 

January 05, 2013

௱௭க

நேரங்கடத்தி 
நின்னை சந்திப்பதன் 
பரிசாய்  
செல்லச்சண்டைகளும் 
பல் பதியும் முத்தங்களும்.

January 04, 2013

௱௭௦

அலைபேசி வழி
நீ  
நடைபழகாது போக,
நின் 
காலடி தடம் உருவாக்கியிருந்த  
நீயெழுப்பி 
விடிந்த வைகறைகளின் 
பாதைகளில் 
பசுமை பூண்டு கிடக்கிறது.

January 03, 2013

௱௬௯

இயலாமை 
திரவ வடிவாகி 
தலையணை நனைத்து 
குரல் கொஞ்சம் மாற்றியிருந்தது.

அன்பு செய்வது எளிது.
அன்பு செய்வதை அறிவிப்பது பெருங்கடினம்.

January 02, 2013

௱௬௮

மீட்பர்கள் 
ஆண்களாக இருக்க வேண்டியதில்லை.

பால்யம் மீட்டவள் நீ!


January 01, 2013

௱௬௭

மணல் புதையும் 
கால்கள்.
இறுக கோர்த்த  
விரல்கள்.
மூச்சுக்காத்தேறிய 
சொற்கள்.

ஆகா...
அற்புதம்.
கடற்கரை 
நடைபயணம்.