December 31, 2012

௱௬௬

பயணங்கள் 
கொணர்ந்தரும் மீள்பிறப்பில் 
முன்ஜெம 
வாசனை முகிழ்ந்த 
பிறப்பொன்று தந்தேன் 
உனக்கே உனக்காய்.

December 30, 2012

௱௬௫

மனம் வெள்ளக்காடாகையில் 
கண்ணீர் தான் வடிகால்! 

விரல்கள் நீட்டித் துடைப்பது வழமை,
கன்னம் தொட்டு இழுவுதல் அருமை.

December 29, 2012

௱௬௪

முகம் பார்க்கும் 
முதல் நொடி 
முத்தம் நிச்சயம் 
என்பது 
தெரிந்த சேதி. 
இதழ் மாறும் 
எச்சில் ருசியுரைக்கும் 
பிரிவின் வலிமிகுதி.

December 28, 2012

௱௬௩

கொட்டிய வார்த்தைகளை 
மறுபடி 
எண்ணுவதில்லை நான் ! 

எண்ணாமல் 
நான் 
கொட்டிய வார்த்தைகளை 
எப்போதும் 
எண்ணி வருந்துகிறாய் நீ.

December 27, 2012

௱௬௨

பேசிப்பேசி 
தீர்ந்துபோன வார்த்தைகளை 
சேமித்து வைத்திருந்தால் 
இந்த 
தனிமை இரவுகளுக்கு 
தீனியிட வசதியாயிருந்திருக்கும்.

December 26, 2012

௱௬௧

வேலைப்பளு கூடிகிடந்ததென 
பேசாதிருந்த நொடிகளில் 
நீ 
பாசக்கயிறறுந்ததென 
கண்ணீர் உகுத்திருந்தாயோ ?

ஊமை பைத்தியக்காரி! நீயா ?
(நின் உளம்)விளங்காதவன்!  நானா ?


December 25, 2012

௱௬௦

சுடச்சுட வார்த்தைகளை 
கொட்டியதாய் 
கோபித்துக்கொள்கிறாய்.

இறுக்கி அனைத்து 
ஈரமுத்தம் 
தந்து கோபம் 
தனிக்க எத்தனித்ததுண்டா நீ ? 

December 24, 2012

௱௫௯

அங்காடித்தெருவில் 
நடைபயின்ற 
நொடிகளிடை 
எத்தனை பூரிப்பு 
நின் முகத்தில்,

கரம் பிடித்து நடைபயின்ற நிலை நினைத்து.


December 05, 2012

௱௪௦

மனக்குகையின் 
பெருஞ்சுவரொன்றில் 
காலத்தால் 
நீங்காததொரு நீள் ஓவியம் 
வரைந்துகொண்டேன்.

பேரிரைச்சலோடும் 
பெரும்பலத்தோடும் 
கொள்ள வரும் பேரலைக்கு
சிக்கி 
தொடர்பறுக்கும் விரல்களை 
உப்புநீரில் 
தெளிவறுந்த விழிகள்  தம் 
தேவையின்றித் தேடி 
அரைநொடியில் 
விரலிடுக்கை 
நிரப்பிக்கொள்ளும் 
நம் அனிச்சை செயல் 
நிரம்பியதொரு அற்புத மெய்யோவியம்.


December 04, 2012

௱௩௯

மடிதூங்கிய வைகறை,
ஊட்டிவிட்டுப் பசியாறிய காலை,
பின்னோடும் மரங்களை சலிக்காது வேடிக்கை பார்த்த நண்பகல், 
எதிர்வருங்கால கதை பேசிக்கழித்த ஏற்பாடு, 
பெருங்கனவோடு வந்திறங்கிய மாலை,
என மிளிர்ந்த
நெடும்பயணம் 
யாமப்பொழுதில் 
நம் கூடல் சத்தங்களின் 
ஆர்பரிப்பில் 
மௌனித்திருக்கும்.

December 03, 2012

௱௩அ

பெருந்துயர் கணமும் 
மிகமகிழ் நிகழ்வும்
உனக்கு நானும் 
எனக்கு நீயுமாய் 
இனி 
ஒவ்வொரு பொழுதும் 
அத்தனை இரவும்.

December 02, 2012

௱௩௭

எத்தனை 
எதிர்பார்ப்புகள் 

எத்தனை 
எத்தனை 
சாவல்கள் 

எல்லாம் 
சாத்தியமாகி 

இதோ !

மேடையில் 
நீயும் 
நானும்

December 01, 2012

௱௩௬

மருதாணி 
சிவப்பேறியிருந்த உள்ளங்கைகளில் 
கன்னம் வைத்து 
ஒளிந்துகொண்டேன்.

தேடியலைந்து தொலைந்து போகிறாய்.