January 25, 2025
கால நினைவு
நினைவு தப்பிய பொழுதுகளில்,
நின்-விரல் பிடித்து
கடல்-கரை நடந்த
கதைகளுக்குள்
தொலைந்து போயிருப்பேன்.
May 15, 2020
மோனநிலை
உன் வியர்வையில்
ஊறிய மலரா ?
மலரில் தோய்ந்த
கூந்தல் மனமா ?
கட்டி அணைத்தபடி
கட்டிலிலே,
இருக்கையிலே,
மாலை வேளையிலே
மாடி படிகளிலே
காது மடல்
மேவுகையில்
காமநிலை தூண்டுவது?
உன் வியர்வையில்
ஊறிய மலரா ?
மலரில் தோய்ந்த
கூந்தல் மனமா ?
April 16, 2020
வேண்டாம்
ஓர் அறையில்
விறல் கூட தீண்டாது
விலகி
வேறு திசை பார்த்தபடி
உறங்கி போன இரவுகள்
இனி
ஒரு போதும் வேண்டாம்.
December 12, 2019
சமாதானம்
என்
வசைகளின்
வாழ்வு
இருநூறு நொடிகள் தான்
இப்போதும்.
விரல் பிணைத்து
தோள் சாய்ந்து
மாரில் குத்தும்
கைகளுக்காகத்தான்
இன்னும் ஏங்குகிறேன்.
நகை மறைத்து
விழி தவிர்த்து
ஒதுங்கியிருத்தலென
உன் கோபமும்
அதன் காலமும்
மாறிடவேயில்லை.
October 27, 2019
மாலை
அழகை
ஓளிர்க்குதுன்
சேலை,
அந்த
ஒளியில்
நிறைந்ததிந்த மாலை.
September 25, 2019
பிரிவுணர்வு.
கன்னம் தடவி
கைகள் கிள்ளி
வெட்கிச் சிவந்து
யோசித்துச் சிரித்து
புதுக்காதலியென
நீ
வரவேற்கும்
நெருக்கம்
இறுக்கும்
பிரிவுகள்
மிக மிக
வேண்டுமினி.
April 15, 2019
காதல்
இந்நீளப்பிரிவிடை
எதர்படுமத்தனை
இணைகளிலும்
நமை வைத்து பார்க்கிறேன்
அருகிருக்கையில்
ஒருபோதும்
புரிபடுவதில்லை
காதல் கலை.
April 03, 2019
ஊடிக்கலவி
உளமிருந்தும்
தர மறந்த
இதழ் முத்தம்
யாவும்,
அருமருந்தாய்
தமையிருத்தி
நமை வருத்தி
இலக்கடையும்
நிகழ்வுகளே
ஊடல்கலவிகளாம்.
March 31, 2019
எல்கை
எண்ணச் சாலையெங்கும்
உன்
பாதச் சுவடுகள்
ஓரிடமென்றில்லாமல்
ஒவ்வொரு திசையிலும்,
எத்திசை
தேடியடைவேன்
எனக்கென நீ
வகுத்தளித்த
எல்கையை?
March 25, 2019
பயண முடிவிலி
ஆண்டுகள் உருண்டோடுதாயினும்
நின்
அன்பின்
ஆழ நீளமறியும்
என்
அகமுயற்சியெல்லாம்
எத்திசையில் பயணிப்பதென்ற
ஆரம்பப்புள்ளியின்
விளிம்பைச்சுற்றியே
வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
July 25, 2015
வேண்டும்
நெஞ்சனைத்து
ஜன்னல்
வழி
விழும்
மழைத்துளி
அள்ளி
முகம் நனைக்கும்
காலம்
வேண்டும்
இனி
வாழும் மட்டும்.
July 16, 2015
ஆதரவு
கண்ணீரென
வழிந்தோடுமென்
மீதான
நின்
கோபங்களுக்கு
அந்நீர்
பருகும்
இதழ்களின்றி
பிறிதோர்
ஆதரவில்லையென்னிடம்.
July 06, 2015
தூரமேகும் நேரம்
இருவருக்குமிடையே
இட்டு நிரப்ப
இரண்டிலக்கத்தில்
பயண தூரம்,
எண்ண மறந்து
எண்ணம் அறுந்து
என
என்ன நிகழ்ந்தாலும்
எனை
என்றும் நினைந்திருக்கும்
உன்
முகமேயென் திசை.
February 22, 2014
நினைவு
அரையுறக்க
நினைவுதப்பிய
தேடலில்
கையெதிர்படும்
பஞ்சுப்பொதி,
மறுபடியும்
நினைவுறுத்தும்
தனிமையுணர்ந்து
தன்னிலை
மறந்துறங்கிய
பின்னிரவை.
மறவேன்
நேற்று
நடந்த
நிகழ்வெனத்
தோன்றும்
நம்
முதல்
சந்திப்பில்
நாணமொட்டிக்கொண்டிருந்த
உன்
முகம்
அலுப்பதேயில்லை.
பொருள்
காத்தருப்பகளில்
பொருள்படுகிறது
அருகின்மையின்
காரணங்கள்.
வழி
கேலிகள்
வடம்பிடித்திழுக்கும்
வம்புகளெல்லாம்
ஊடல்
வழியோடும்
கூடல்
வாய்ப்புகளாய்.
காரணம்
புன்னகைகளை
மட்டுமல்ல
கண்ணீர்த்துளிகளையும்
மனம்
கணக்குவைப்பதில்லை,
காதல்
நாளும்
வளர
அதுவொன்றே
பெருங்காரணம்.
February 14, 2014
பெருங்கனவு
பிரிதலும்
பிரிதல் நிமத்தமும்
அற்றதொரு
காலப்பெருவெளியில்
உன்னோடு
கழனியேறி,
களைபறித்து,
உழுதுண்டு வாழும்
கனவுன்டு
தோழி
தவம்
நெஞ்சேறியுறங்காது
மௌனங்கள் பேசு
மணிக்கணக்கில்
கேட்டிருக்குறேன்.
Newer Posts
Older Posts
Home